திருப்பூரில், தனியார் நிறுவன ஊழியருக்கு தங்கநாணயம் பரிசு விழுந்ததாக கூறி நூதன மோசடி


திருப்பூரில், தனியார் நிறுவன ஊழியருக்கு தங்கநாணயம் பரிசு விழுந்ததாக கூறி நூதன மோசடி
x
தினத்தந்தி 14 Feb 2018 3:15 AM IST (Updated: 14 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு, தங்க நாணயம் பரிசு விழுந்துள்ளதாக கூறி பார்சல் அனுப்பி நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 38). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த வாரம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், திருச்செங்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் ‘உங்கள் செல்போன் எண் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு 4 கிராம் தங்க நாணயம், வெள்ளி காப்பு, கவரிங் நெக்லஸ், ஒரு நவீன செல்போன் ஆகியவை பரிசாக விழுந்துள்ளது. இந்த பரிசு பொருட்களை உங்கள் முகவரிக்கு தபால் மூலம் பார்சல் அனுப்பி வைக்கிறோம். அதற்கு ரூ.3 ஆயிரத்து 200 மட்டும் தபால்காரரிடம் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ராஜூவும் தனது வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். முகவரியை பெற்ற அந்த பெண், இன்னும் 4 நாட்களில் உங்கள் முகவரிக்கு பார்சல் வந்து விடும். தபால்காரரிடம் ரூ.3 ஆயிரத்து 200 கொடுத்து பார்சலை பெற்றுக்கொள்ளுங்கள் என்று இணைப்பை துண்டித்தார்.

தங்க நாணயம், செல்போன் என கூறியதும் ராஜூவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. பார்சலை எதிர்நோக்கி அவர் காத்திருந்துள்ளார். அதன்பிறகு 4 நாட்கள் கழித்து அவருக்கு தபால் மூலம் பார்சல் வந்துள்ளது. பணத்தை செலுத்தி அந்த பார்சலை வாங்கி பார்த்த பிறகு தான் உண்மை நிலை புரிந்தது. அந்த பார்சலுக்குள் செல்போனும் இல்லை. தங்க நாணயமும் இல்லை. கவரிங் நகைகள் மட்டுமே இருந்துள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு கூட மதிப்பு பெறாத பொருட்களை அனுப்பி நூதன முறையில் இந்த மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

திருப்பூரில் பலருக்கு இதுபோல் செல்போனில் தொடர்பு கொண்டு தபால் மூலமாக பார்சல் அனுப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோல் அழைப்புகள் வரும்போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று அந்த அழைப்பு குறித்த எண்களை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். முடிந்தவரை செல்போனில் அழைக்கும் வெளிநபரிடம் வீட்டு முகவரியை தெரிவிக்கக்கூடாது. பார்சல் வந்தாலும் அவற்றை வாங்காமல் இருக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story