சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய எந்திரங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய எந்திரங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய எந்திரங்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் பகுதி-1 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அவினாசி, காங்கேயம், மூலனூர், திருப்பூர், ஊத்துக்குளி வட்டாரங்களில் தலா ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி தொகுப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொகுப்புகளில் உள்ள மானாவாரி விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு தொகுப்புக்கு மதிப்பு கூட்டு எந்திரங்கள் 75 சதவீத மானியத்தில் அதாவது அதிகபட்சம் ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த எந்திரங்கள் கொள்முதல் செய்ய பயனாளிகள் தேர்வு சம்பந்தப்பட்ட வட்டார தொகுப்பு மேம்பாட்டு குழுவினரால் மேற்கொள்ளப்படும்.

ஒருங்கிணைந்த வகையில் அனைத்து வகை சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான எந்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வேளாண் பொறியியல் துறையின் வழிகாட்டுதலின் படி பெற்றுக்கொள்ளலாம்.

தொகுப்பு, வட்டாரங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நபார்டு வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சிறந்த செயல்பாட்டில் உள்ள கூட்டுப்பண்ணைய திட்டத்தில் தொடங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இரண்டாம் கட்ட முன்னுரிமை வழங்கப்படும்.

மதிப்பு கூட்டிய பொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினர் மூலம் தகுந்த வழிகாட்டுதல் அளிக்கப்படும். மதிப்பு கூட்டு எந்திரங்கள் அமைக்க விருப்பமுள்ள சம்பந்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், குழுக்களுக்கு போதுமான அளவு இடவசதி, மின் இணைப்பு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குழுக்களால் தயாரிக்கப்படும் விரிவான திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும்.

5 மானாவாரி தொகுப்புகளில் மதிப்பு கூட்டு எந்திரங்கள் அமைக்க விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் குழுக்கள், விரிவான திட்ட வழிமுறைகளை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் தெரிந்து கொண்டு உரிய விண்ணப்பங்களை தொகுப்பு மேம்பாட்டு குழுவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிடம் ஒப்புதல் பெற்று மதிப்பு கூட்டு எந்திரங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Next Story