நடத்தையில் சந்தேகம் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கு வலைவீச்சு


நடத்தையில் சந்தேகம் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வாஷியில், நடத்தை சந்தேகத்தில் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவியை கொலை செய்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

வாஷியில், நடத்தை சந்தேகத்தில் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவியை கொலை செய்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ரியல் எஸ்டேட் ஏஜெண்டு


நவிமும்பை வாஷியை சோந்தவர் கணேஷ் நாயக்(வயது42). ரியல் எஸ்டேட் ஏஜெண்டு. இவரது மனைவி சினேகல்(37). இந்த தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் நாயக்கிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து, உதைத்தும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சினேகல் கணவரிடம் கோபித்துக்கொண்டு காமோட்டேயில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று காலை சினேகல் தனது மகனின் துணிகளை எடுத்து கொண்டு செல்வதற்காக வீட்டிற்கு வந்தார்.

மனைவி கொலை

அப்போது சினேகலிடம் கணேஷ் நாயக் மீண்டும் தகராறு செய்து இருக்கிறார். இந்த தகராறு முற்றியதில் கடும் கோபம் அடைந்த கணேஷ் நாயக் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சினேகலின் தலையில சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கத்திரிக்கோலாலும் குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சினேகல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கணேஷ் நாயக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்தநிலையில், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சினேகலின் சகோதரர் கோபர்கைர்னேயில் வசித்து வரும் தனது இன்னொரு சகோதரியிடம், கணேஷ் நாயக் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

நடத்தையில் சந்தேகம்


அதன்பேரில் அவர் சகோதரி சினேகலை பார்ப்பதற்காக வந்தார். அப்போது வீட்டிற்குள் சினேகல் பிணமாக கிடப்பதை பார்த்து பதறிப்போனார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சினேகலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சினேகலின் நடத்தையில் கணேஷ் நாயக்கிற்கு சந்தேகம் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்திருக்கலாம் எனவும், இந்த பிரச்சினை காரணமாக சினேகல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணேஷ் நாயக்கை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story