ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 33 பேர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 33 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனி,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பழனி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பானு, பழனி ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது, ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மதுரை கோட்டத்தில் காலியாகவுள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிக்ககூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து பழனி வழியாக மதுரை சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் ரெயில் நிலையத்துக்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா, ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 33 பேரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அதன் பின்பு மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story