ஆன்-லைன் நிறுவன பார்சலில் சோப்பு, செங்கல்கள் வைத்து மோசடி; 4 ஊழியர்கள் கைது ரூ.10 லட்சம் பொருட்கள் பறிமுதல்


ஆன்-லைன் நிறுவன பார்சலில் சோப்பு, செங்கல்கள் வைத்து மோசடி; 4 ஊழியர்கள் கைது ரூ.10 லட்சம் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் வர்த்தக நிறுவன பார்சலில் சோப்பு, செங்கல்கள் வைத்து மோசடி செய்து வந்த 4 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தானே,

ஆன்-லைன் வர்த்தக நிறுவன பார்சலில் சோப்பு, செங்கல்கள் வைத்து மோசடி செய்து வந்த 4 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசில் புகார்


தானே மாவட்டம் பிவண்டி மான்கோலியில் ஆன்-லைன் வர்த்தக பொருட்கள் அனுப்பும் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களுக்கு பதிலாக சோப்புகள், செங்கல்கள் வருவதாக அடிக்கடி புகார்கள் வந்தது.

இது குறித்து வர்த்தக மேலாளர் மோகித் என்பவர் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதமாக 57 விலை உயர்ந்த செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் நார்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

4 ஊழியர்கள் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் டெலிவரி ஊழியர்கள் தான் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி உமேஷ் குட்வி(வயது22), மெகபூப் ஹைசேன்(19), சச்சின் பட்டோலே(32), சந்தீப் சராப்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பார்சலை பிரித்து பொருட்களை திருடிவிட்டு அதற்கு பதிலாக சோப்பு, செங்கல்களை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆர்டர் செய்து ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்களிடம் அந்த பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

Next Story