கானத்தூர் அருகே கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 14 பேர் மீட்பு


கானத்தூர் அருகே கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 14 பேர் மீட்பு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:40 AM IST (Updated: 14 Feb 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

கானத்தூர் அருகே சவுக்கு தோப்பில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 14 பேர் மீட்கப்பட்டனர்.

திருப்போரூர்,

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு அருகே கானத்தூர் ரெட்டிகுப்பம் கிராமத்தில் சென்னை ஜேம்ஸ் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தில் சவுக்கு தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் 14 பேர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக திருப்போரூர் தாசில்தார் விமல்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் கானத்தூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த 14 பேரையும் மீட்டு திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சூரடிமங்கலம் பகுதியை சேர்ந்த தேவராஜி (வயது 75), விஜயன் (70), பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (25) மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 14 பேர் என்பதும், இருளர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சவுக்கு தோப்பில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் மீட்கப்பட்ட அனைவருக்கும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெய சீலன் முன்னிலையில் தேவையான அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை தாசில்தார் வழங்கினார்.


Next Story