குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:19 AM IST (Updated: 14 Feb 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மொடக்குறிச்சி அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் மற்றும் புதுவலசு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் லக்காபுரம் நால் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி தாசில்தார் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஜோதிர் லதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்குள்ளவர்களுக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்தோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அதிகாரிகள், ‘லக்காபுரம் ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டு உள்ள மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை மதியம் 12 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக லக்காபுரம் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story