சத்தியமங்கலம் அருகே சொத்தைப்பல் வலியால் குட்டி யானைக்கு உடல் நிலை பாதிப்பு, தாய் யானை பாசப்போராட்டம்


சத்தியமங்கலம் அருகே சொத்தைப்பல் வலியால் குட்டி யானைக்கு உடல் நிலை பாதிப்பு, தாய் யானை பாசப்போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:25 AM IST (Updated: 14 Feb 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

சொத்தைப்பல் வலியால் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்துக்கிடந்த குட்டி யானையை சுற்றி, சுற்றி வந்து தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. நேற்று முன்தினம் இரவு இங்குள்ள கரளியம் கிராமத்திலிருந்து உகினியம் செல்லும் ரோட்டில் குட்டியானை ஒன்று உடல் சோர்வடைந்த நிலையில் சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரகர் ஜான்சன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்தார்கள். ஆனால் குட்டியானை சோர்வடைந்த நிலையில் இருந்ததால் வனப்பகுதிக்கு செல்லாமல் அங்கேயே நின்றது.

இந்தநிலையில் நேற்று காலை கரளியம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்ட தோட்டத்தில் குட்டியானை படுத்துக்கிடந்தது. அதன் அருகே குட்டி யானையின் தாய் யானையும் சோகத்துடன் நின்றுகொண்டு இருந்தது.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தாய் யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால் தாய் யானை குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து வனப்பகுதிக்கு செல்லாமல் பாசப்போராட்டம் நடத்தியது. 15 முறை வனத்துறையினர் முயற்சி செய்தும் தாய் யானையை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்ட முடியவில்லை.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானை படுத்திருக்கும் இடம் அருகே நெருப்பு பற்றவைத்தனர். அதனால் தாய் யானை குட்டி யானை படுத்திருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று, ஒரு வேலி மறைவில் நின்றுகொண்டு இருந்தது. ஆனால் குட்டியானையை பார்த்தபடியே சோகத்தோடு நின்றுகொண்டு இருந்தது.

மாலை 4 மணியளவில் வனத்துறை கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியானைக்கு சிகிச்சை அளித்தார். முதலில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் ஊசி போடப்பட்டது.

இதுகுறித்து கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, ‘4 வயது உடைய இந்த குட்டியானைக்கு சொத்தைப்பல் வலி உள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக தீவனம் உண்ணாமல் இருந்துள்ளது. மேலும் அதற்கு வாய் புண்ணும் உள்ளது. அதனால்தான் உடல் சோர்வடைந்து படுத்துக்கொண்டது.‘ என்றார். வனத்துறையினர் கூறும்போது, ‘தாய் யானை குட்டியானையை பார்த்துக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் யாரும் யானை இருக்கும் இடத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக தொடர்ந்து குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்படும்‘ என்றார்கள்.

Next Story