தூத்துக்குடியில் அனுமதியின்றி போராட்டம்: ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 8 பேர் சிறையில் அடைப்பு


தூத்துக்குடியில் அனுமதியின்றி போராட்டம்: ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 8 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 15 Feb 2018 2:00 AM IST (Updated: 15 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியை உள்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியை உள்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு விடிய விடிய கைக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 271 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 பேர் சிறையில் அடைப்பு


இதில் அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ்(வயது 30), பெரியகடை தெருவை சேர்ந்த காசிபாபு மனைவி ஓய்வு பெற்ற பேராசிரியை பாத்திமாபாபு(65), தூத்துக்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த விமல்ராஜேஷ்ராஜ் (40), முத்தையாபுரத்தை சேர்ந்த வேல்ராஜ்(36), ராஜீவ்நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ஆல்பர்ட்சாமுவேல்(58), தூத்துக்குடி பனிமயநகரை சேர்ந்த சுஜித்(42), முனியசாமி நகர் 2-வது தெருவை சேர்ந்த துரை என்.பாண்டியன், அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த முருகன்(38) ஆகியோர் மீது தென்பாகம் போலீசார், போராட்டத்துக்கு உரிய அனுமதி பெறாமலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை போராட்டத்துக்கு தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் 8 பேரையும் நேற்று முன்தினம் இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜோதிகுமார், தெற்குவீரபாண்டியபுரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் 70 மாணவர்களை பள்ளி சீருடையில் போராட்டத்தில் பங்கேற்க செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தென்பாகம் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அ.குமரெட்டியாபுரம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story