திருவள்ளூர், செங்கல்பட்டில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், செங்கல்பட்டில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:30 AM IST (Updated: 15 Feb 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், செங்கல்பட்டில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றிய மணிமாலாவின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவும், மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செவிலியர் சங்க நிர்வாகிகள் சகிலா, சபரிசதீஷ், சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் அருள்டேனியல், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் திரளான செவிலியர்கள் கலந்து கொண்டு கருப்பு பட்டை அணிந்து மணிமாலாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தலைவர் பாஸ்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணி மாலாவின் மரணத்துக்கு காரணமான 2 மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Next Story