மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.21½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.21½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:15 AM IST (Updated: 15 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

அருங்கால் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.21½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமிபிரியா வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் வட்டம் அருங்கால் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் முன்னிலை வகித்தார். முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்கள் ரூ.57 ஆயிரத்து 210 மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான வங்கி கடனுதவிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 884 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள் உள்பட மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 46 ஆயிரத்து 96 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

97 மனுக்களுக்கு நடவடிக்கை

முகாமில் கலெக்டர் பேசுகையில், அருங்கால் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமிற்கு முன்னதாக பொதுமக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 97 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாமில், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, செய்தித்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்களுக்கு திட்டங்களை விளக்கி அரங்குகள் அமைக்கப்பட்டும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் பற்றி அதிநவீன மின்னணுத்திரை வாகனம் மூலம் படக்காட்சியும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதில் துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், இணை இயக்குனர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) நஸீர், மாவட்ட துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி நன்றி கூறினார். 

Next Story