வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் அறுவடை எந்திரம் தீயில் எரிந்து நாசம்


வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் அறுவடை எந்திரம் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:30 AM IST (Updated: 15 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் அறுவடை எந்திரம் தீயில் எரிந்து நாசமானது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 35). விவசாயி. இவரது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். விளைந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்வதற்காக சேலம் மாவட்டம், வெள்ளையூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான அறுவடை எந்திரத்தை கொண்டு வந்தார். பின்னர் அந்த எந்திரத்தை வைத்து மக்காச்சோளம் அறுவடை செய்தனர். அறுவடை எந்திரத்தை நாவலூரை சேர்ந்த குமார் (34) என்பவர் ஓட்டினார்.

அப்போது வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தபோது அறுவடை எந்திரத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட குமார் அதிர்ச்சியடைந்து அறுவடை எந்திரத்தை உடனடியாக வயலில் நிறுத்தி விட்டு கீழே வந்து விட்டார். இதையடுத்து இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு படைவீரர்கள் வருவதற்குள் மக்காச்சோள அறுவடை எந்திரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் மக்காச்சோள பயிர்களில் தீ பரவாமல் தடுத்தனர். ஆனால் அறுவடை எந்திரம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. தீயில் எரிந்த அறுவடை எந்திரத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story