ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:15 AM IST (Updated: 15 Feb 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜனகராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து, நகர செயலாளர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் சரவணன், முனுசாமி, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் விளக்கி பேசினார்கள். தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதோடு நிற்கிறது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். விவசாய விளைநிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும்போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். உயர் அழுத்த மின்கம்பிகள் செல்லும் பாதையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

கோடை காலம் தொடங்குவதால் தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும். வனபகுதிகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்சேதம் செய்வதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சண்முகம், பூபதி ராஜா, பிரகாசம், வடிவேல், கணேசன், விஸ்வநாதன், வேடியப்பன், கக்கன் உள்பட நிர்வாகிகள், சார்புஅமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊடகப்பிரிவு நிர்வாகி கவுதமன் நன்றி கூறினார். 

Next Story