அ.தி.மு.க. அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


அ.தி.மு.க. அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2018 4:00 AM IST (Updated: 15 Feb 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் தேசபந்து திடலில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

சம்பாதிப்பதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்த மக்கள் தற்போது பஸ்சில் செல்வதற்காகவே சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டால் மாநில அரசு தான் அதை சரிப்படுத்த வேண்டும். ஆனால் அந்த நிதிச்சுமையை மக்கள் தலையில் ஏற்றி விட்டார்கள்.

போக்குவரத்து கழகம் என்பது நஷ்டகணக்கு பார்ப்பதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்ய ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து கழகத்தினை சீர் படுத்தவும், கட்டணத்தை குறைக்கவும் 27 பரிந்துரைகளை தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார். அதை அவர் படிக்ககூட இல்லை. எதிர்க்கட்சிகளின் கருத்தை முதல்-அமைச்சர் கேட்க தயாராக இல்லை.

பெருந்தலைவர் காமராஜர் சிலையை பார்த்தால் அவர் நாட்டுக்கு செய்த கல்விச் சேவை நினைவுக்கு வரும். எம்.ஜி.ஆரின் சிலையை பார்த்தால் அவர் ஏழை மக்களின் பசியை போக்கியது நினைவுக்கு வரும். அண்ணாவின் சிலையை பார்த்தால் அவரின் பண்முக திறமை நினைவுக்கு வரும்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துள்ளனர். அதன்படி ஜெயலலிதா குற்றவாளி. அவர் தற்போது இருந்தால் பெங்களூரு சிறையில் தான் இருந்து இருப்பார். அவரது உருவப் படத்தை மரபை மீறி சட்டமன்றத்தில் திறந்து வைத்துள்ளனர். வருங்காலத்தில் பார்க்கும் போது என்ன நினைவுக்கு வரும் என்பது உங்களுக்கே தெரியும்.

தமிழக மக்கள் அ.தி.மு.க. அரசை அகற்ற தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆற்றலரசு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல்மஜித், மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் முகமதுகவுஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story