சாலையோர டீக்கடையில் டீ போட்ட அமெரிக்க தூதர்


சாலையோர டீக்கடையில் டீ போட்ட அமெரிக்க தூதர்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:45 AM IST (Updated: 15 Feb 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சாலையோர டீக்கடையில் அமெரிக்க தூதர் டீ போட்டார்.

புதுச்சேரி,

இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலை புதுச்சேரி வந்து இருந்தார். புதுவை கடற்கரை சாலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். நேற்று காலை அவர் கடற்கரை சாலைக்கு காரில் சென்றார்.

அங்கு சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர் காந்தி திடல், பாரதி பூங்கா, கப்ஸ் தேவாலயம், மணக்குள விநாயகர் கோவில், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது பாரதி பூங்காவில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

ரெயில் நிலையத்திற்கு சென்றபோது ரெயில் நிலையத்தின் எதிரில் உள்ள சாலையோர டீக்கடையை பார்த்து அங்கு டீ குடிக்க விரும்பினார். அதை தன்னுடன் வந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் பாய்லர் மூலம் போடப்படும் டீ தான் தனக்கு வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் பாய்லர் வைத்து டீ போடும் கடைக்கு அமெரிக்க தூதரை அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தார்.

அப்போது டீ போட்டுக் கொண்டு இருந்தவரை பார்த்து, தானும் இதுபோல் டீ போட வேண்டும் என்று விரும்பினார். உடன் டீக்கடை தொழிலாளி அந்த கப்பை அமெரிக்க தூதரிடம் வழங்கினார். இதனை அடுத்து அமெரிக்க தூதர் டீ போட்டுக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார். தொடர்ந்த சட்டசபை வளாகத்திற்கு சென்றார். அங்கு முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘புதுச்சேரியை சுற்றிப்பார்த்து தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்தேன். கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னென்ன பணிகளில் இணைந்து செயல்பட்டு புதுவையை மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்’ என்றார். 

Next Story