கூடலூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிவராத்திரி கொண்டாடிய ஆதிவாசி மக்கள்


கூடலூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிவராத்திரி கொண்டாடிய ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிவராத்திரி விழாவை ஆதிவாசி மக்கள் கொண்டாடினர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் உள்ள அள்ளூர்வயல், கோடமூலா கிராமங்களில் சுமார் 200 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் ஆதிவாசி மக்கள் வழிபடும் பொம்மதேவர், சிவன், கெலவத்து மாரியம்மன், பரதேவதைகளின் கோவில்கள் உள்ளன.

இந்த நிலையில் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கூறி நேற்று முன்தினம் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஆதிவாசி மக்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுக்கப்பட்டனர்.

இதையடுத்து தனியார் எஸ்டேட்டுக்குள் இருக்கும் ஆதிவாசி மக்களின் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் எஸ்டேட்டுக்குள் உள்ள கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாட ஆதிவாசி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் எஸ்டேட் சாலை வழியாக ஆதிவாசி மக்கள் நடந்து கோவிலுக்கு சென்றனர்.

அங்கு போலீஸ் பாதுகாப்புடன் இரவு தொடங்கி நேற்று மாலை வரை பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தவாறு மகா சிவராத்திரி விழாவை ஆதிவாசி மக்கள் சிறப்பாக கொண்டாடினர். சுவாமி அருள்வாக்கு, ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அவர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்கேயே அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர். சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட முடிந்ததால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story