சத்தியமங்கலம் அருகே நோயால் அவதிப்பட்ட குட்டி யானை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது


சத்தியமங்கலம் அருகே நோயால் அவதிப்பட்ட குட்டி யானை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது
x
தினத்தந்தி 15 Feb 2018 3:15 AM IST (Updated: 15 Feb 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே நோயால் அவதிப்பட்ட குட்டி யானை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது. அந்த யானை காட்டில் விடப்பட்டது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. இங்குள்ள கரளியம் கிராமத்தில் உள்ள ஒரு மக்காச்சோளம் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் குட்டியானை சோர்வடைந்த நிலையில் படுத்துக்கிடந்தது. அதன் அருகே தாய் யானையும் சோகத்துடன் நின்றுகொண்டு இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் வனத்துறையினர் அங்கு சென்று கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தாய் யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால் தாய் யானை குட்டி யானையை சுற்றிச்சுற்றி வந்தது. பின்னர் தாய் யானை சற்றுதூரத்தில் சென்று நின்று கொண்டது. இதையடுத்து வனத்துறை கால்நடை டாக்டர் அசோகன் அங்கு வந்து குட்டியானைக்கு சிகிச்சை அளித்தார். முதலில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் ஊசி போடப்பட்டது.

இதுகுறித்து கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, ‘4 வயது உடைய இந்த குட்டியானைக்கு சொத்தைப்பல் வலி உள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக தீவனம் உண்ணாமல் இருந்துள்ளது. மேலும் அதற்கு வாய் புண்ணும் உள்ளது. அதனால்தான் உடல் சோர்வடைந்து படுத்துக்கொண்டது.‘ என்றார். தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாய் யானையுடன் 2 யானைகள் குட்டி யானை படுத்துக்கிடந்த இடத்துக்கு வந்தன. பின்னர் 3 யானைகளும் சேர்ந்து குட்டி யானையை துதிக்கையால் தூக்க முயன்றன. குட்டி யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் தாய் யானை மற்ற 2 யானைகளுடன் அங்கிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.

நேற்று 2-வது நாளாக குட்டி யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். கால்நடை டாக்டர் அசோகன் யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். மேலும் குளுக்கோசும் ஏற்றப்பட்டது. நேற்று மாலை 6 மணி வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குட்டி யானை தானாக எழுந்து நின்றது. தீவிர சிகிச்சையால் குட்டி யானை குணமடைந்தது தெரிய வந்தது. யானைக்கு வனத்துறையினர் பால், பழம் தின்ன கொடுத்தனர். பின்னர் தெம்புடன் காணப்பட்ட குட்டி யானை நடந்து செல்லத்தொடங்கியது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை பின்தொடர்ந்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். 

Next Story