குடிநீர் வழங்க கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இலங்கை அகதிகள் முற்றுகையிட முயற்சி


குடிநீர் வழங்க கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இலங்கை அகதிகள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 15 Feb 2018 3:00 AM IST (Updated: 15 Feb 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்க கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இலங்கை அகதிகள் முற்றுகையிட முயன்றனர்.

நெய்வேலி

நெய்வேலி அருகே உள்ளது இந்திரா நகர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் உள்ள முகாமில் 500-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் என்.எல்.சி.யில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நெய்வேலியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு சுற்றுசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது பாரதி நகருக்கு என்.எல்.சி. பகுதியில் இருந்து சென்ற குடிநீர் குழாய் உடைந்தது. இதன் காரணமாக பாரதி நகர் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக காலி குடங்களுடன் திரண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்ற இலங்கை அகதிகள் முற்றுகை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து உடைந்த குழாய் உடனடியாக சரிசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story