பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி மும்பை வைர வியாபாரி மீது சி.பி.ஐ.யிடம் புகார்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி மும்பை வைர வியாபாரி மீது சி.பி.ஐ.யிடம் புகார்
x
தினத்தந்தி 15 Feb 2018 4:06 AM IST (Updated: 15 Feb 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடிக்கு மோசடி நடந்து உள்ளது. இதுதொடர்பாக மும்பை வைர வியாபாரி மீது சி.பி.ஐ.யிடம் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது.

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடிக்கு மோசடி நடந்து உள்ளது. இதுதொடர்பாக மும்பை வைர வியாபாரி மீது சி.பி.ஐ.யிடம் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது.

ரூ.11,700 கோடி மோசடி

நாட்டின் 2-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ.11,700 கோடி) பண மோசடி நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி மற்றும் ஒரு ஆபரண நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இதுபற்றி வங்கி நிர்வாகத்தினர் கூறும்போது, “வங்கிக் கணக்குகளில் ரூ.11,700 கோடிக்கு மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதை கண்டுபிடித்து உள்ளோம். இதுபோன்ற பணப்பரிமாற்றம் இயல்பான ஒன்றுதான் என்றபோதிலும் இதில் பொறுப்புத்தன்மை குறித்த கேள்வியும் எழுகிறது. எனவே இதில் சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், “இந்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு புகார்கள் வந்தன. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்களை உடனடியாக வெளியிட இயலாது. அது விசாரணையை பாதிப்பதாக அமையும்“ என்று தெரிவித்தனர்.

இதுபற்றி மும்பை பங்குச் சந்தை வட்டாரத்தினர் கூறுகையில், “வங்கியில் கணக்கு வைத்துள்ள சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இதுபோல் கண்டும் காணாமல் வங்கியில் மோசடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் இந்த பரிமாற்றத்தை வேறு வங்கிகளிடம் காண்பித்து தங்களது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை பெற்றுள்ளனர்” என்று குற்றம்சாட்டினர்.

பங்குகள் விலை சரிவு

இந்த மோசடி புகார் காரணமாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் விலை நேற்று மும்பை பங்குச் சந்தையில் 10 சதவீதம் வரை குறைந்தது.

நிரவ் மோடியும் அவருடைய பங்குதாரர்களும் ரூ.280 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story