இருண்ட வலை


இருண்ட வலை
x
தினத்தந்தி 15 Feb 2018 10:33 AM IST (Updated: 15 Feb 2018 10:33 AM IST)
t-max-icont-min-icon

பொதுவாக வலை அல்லது இணையம் என்று குறிப்பிடும் போது பரவலாக எல்லோரும் அறிந்த மற்றும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இணையத்தை குறிப்பிடுகிறோம். அதாவது இன்டர்நெட்.

இணையம் கணக்கில்லா இணையதளங்களையும், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும், மின்வணிகம் உள்ளிட்ட இன்னும் பிற சேவைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் பொதுவான அம்சம், தேடு எந்திரங்களால் அணுகக் கூடியதாக இருப்பது தான். அதாவது கூகுள் உள்ளிட்ட இன்னும் பிற தேடுதல் எந்திரங்களில் இதை தேடலாம். இதன் பொருள் இந்த இணையதளங்களும், இணைய பக்கங்களும் தேடு எந்திரங்களால் பட்டியலிடப் பட்டுள்ளன என்பது தான்.

இப்படி தேடு எந்திரங்களால் பட்டியலிடப்படாத பகுதியும் இணையத்தில் இருக்கிறது. நாம் உபயோகிக்கும் இணையம் வெறும் 7 சதவீதம்தான். இவைதான் அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளன. மீதி 93 சதவீத வலைத்தளங்கள் பார்க்க முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தேடு எந்திரங்களின் தேடல் சிலந்திகள் துழாவ முடியாத வகை அல்லது வடிவத்தில் தகவல்களை கொண்டிருக்கும் பக்கங்களால் இணையத்தின் பெரும் பகுதி நிறைந்திருக்கிறது. இந்த வகை இணையமே ஆழ் வலை என்று கூறப்படுகிறது. இன்னமும் கண்டறியப்படாத வலை என்றும் வைத்துக்கொள்ளலாம். இப்போதுள்ள தேடு எந்திரங்கள் எல்லாம் இணையத்தின் மேல்பகுதியில் தான் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. ஆழ் வலையில் நாமறியாத பொக்கிஷங் களும் மறைந்திருக்கலாம். ஆழ் வலையில் தேடும் பிரத்யேக தேடு எந்திரங்கள் பல இருக்கின்றன.

இந்த ஆழ்வலையின் ஒரு பகுதி தான் இருண்ட வலை. இன்னமும் அணுகப்படாத இணையதளங்கள் மட்டும் அல்லாமல் பொதுவாக அணுக முடியாத தளங்களை கொண்டு இது அமைந்திருக்கிறது. இதில் வலைத்தளங்களின் முகவரி புரியாத எண்கள் கொண்ட சங்கேத மொழியாக இருக்கும். இந்த தளங்களை எளிதில் அணுக முடியாது. இவற்றை அணுக பிரத்யேக அனுமதி அல்லது தனி பிரவுசர் வேண்டும். பிராக்ஸி சர்வர்கள் பின்னே இவை ஒளிந்திருக்கலாம். அனாமதய தளங்கள் தான் இதில் அதிகம். சட்டவிரோதமான காரியங்களுக்கு இவை அதிகம் பயன்படுவதால் ‘டார்க் வெப்’, அதாவது ‘இருண்ட வலை’ என குறிப்பிடப் படுகிறது. இருண்ட வலை தீய நோக்கத்துடன் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் நினைத்துவிடக் கூடாது. தணிக்கைக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் கொடுங்கோல் அரசாங்கங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடவும் அவை உதவுகின்றன. ராணுவம் அணு ஆயுதம் போன்ற பாதுகாப்பான பணிகளில் பயன்படுத்தப்படுவது இந்த டார்க் வெப்சைட். இதனை சாதாரண மக்கள் பார்க்க முடியாது.

Next Story