குழந்தை, பெண்கள் பாதுகாப்பிற்கான சேவை மையம் கலெக்டர் லதா தொடங்கி வைத்தார்
மாவட்டத்தில் குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான இலவச தொலைபேசி-1098 சேவை மையத்தை கலெக்டர் லதா தொடங்கிவைத்தார்.
சிவகங்கை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் சார்பில் குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி-1098 சேவை மையம் தொடக்க விழா சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் லதா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இலவச தொலைபேசி-1098 சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் லதா பேசியதாவது:-
பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவிர்க்கும் நிலையை மாற்றிடவும், போதிய விழிப்புணர்வை தெரிந்து கொள்ளவும் மாவட்ட அளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சமூகநல அலுவலகம், தொழிலாளர் நலம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மாவட்ட அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதுடன், குழந்தைகளுக்கு தேவையான படிப்புக்களை மேற்கொள்ள வழி செய்கிறது. அத்துடன் அவர்களது பாதுகாப்பிற்கு தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்திட புதிதாக இலவச தொலைபேசி-1098 சேவை மையம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெண் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். அந்த வகையில் பெண் குழந்தைகள் கல்வியை முழு அளவில் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல், மனதளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றும் குழந்தை திருமணங்களை தடை செய்தல், பாலியல் தொடர்பான புகார்கள் ஆகியவற்றை இலவச சேவை மையத்தில் தெரிவித்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று புகார்கள் வரும் நிலையில் தெரிவிப்பவர்கள் குறித்தும், பாதிப்பு அடைந்தவர்கள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story