ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 17 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 17 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:15 AM IST (Updated: 16 Feb 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

இடையாத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள இடையாத்தூரில் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதியின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேற்று முன்தினம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி நேற்று காலை ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 753 காளைகள் களம் கண்டன. அவற்றை அடக்க 228 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

காளைகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் பெரும்பாலான காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசின. முடிவில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடு, ரொக்க பணம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 3 பேர், பார்வையாளர்கள் 14 பேர் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த சரத்குமார்(வயது 28), பழனிசாமி(30), பிரபு(23) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை, பொன்னமராவதி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டையொட்டி புதுக்கோட்டை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் காரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதை திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதியும் கண்டு ரசித்தார். 

Next Story