புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற வாலிபர்


புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: தீக்குளிக்க முயன்ற வாலிபர்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:45 AM IST (Updated: 16 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதை அதிகாரிகள் தடுத்ததால், தீக்குளிக்க போவதாக மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மோளபாளையம் பகுதியில் சாலையோரத்தில் 20 சென்ட் புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை சுற்றி பொதுமக்கள் தங்களது செலவில் கம்பிவேலி அமைத்தனர். தற்போது அந்த நிலத்தில் பகுதி நேர ரேஷன் கடை கட்டிடமும், இ-சேவை மைய கட்டிடமும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அந்த நிலத்தின் கம்பி வேலியை அதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி(வயது 60) மற்றும் அவரது மகன் திலீப்குமார்(25) ஆகியோர் அகற்றிவிட்டு, தனது வீட்டிற்கு செல்ல பாதை அமைக்க நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயன்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அன்னூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் தேவநாதன், வருவாய் அலுவலர் சையத் இலியாஸ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது திலீப்குமார் தனது வீட்டின் மாடிக்கு சென்று, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த வருவாய் அலுவலர் மாடிக்கு சென்று, அவரை தடுத்து நிறுத்தினார்.

அப்போது கம்பிவேலியை சரி செய்து மீண்டும் அமைக்காமல், கயிறு மட்டும் கட்டிவிட்டு அடுத்த ஒரு வாரத்தில் கோட்டாட்சியரிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க முயன்றனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவியது. உடனே அதிகாரிகள் ‘இந்த இடம் அரசுக்கு சொந்தமானது‘ என்ற வாசகம் அடங்கிய பலகையை நட்டு வைத்தனர். பின்னர் அந்த நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட கம்பி வேலி மீண்டும் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story