கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 230 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் மற்றும் பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மதியம் கூடினர். அப்போது செயலாளர் ராஜேந்திரன் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதையடுத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென்று கலெக்டர் அலுவலக சாலைக்கு ஊர்வலமாக வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடுமாறு கூறினர். ஆனால் சத்துணவு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 230 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Next Story