கோத்தகிரி அருகே சத்துணவு சாப்பிட்ட 8 மாணவர்கள் வாந்தி மயக்கம்


கோத்தகிரி அருகே சத்துணவு சாப்பிட்ட 8 மாணவர்கள் வாந்தி மயக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2018 5:15 AM IST (Updated: 16 Feb 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே சத்துணவு சாப்பிட்ட 8 மாணவ-மாணவிகள் மயங்கி விழுந்தனர். தரமற்ற உணவை கொடுத்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 47 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 44 பேருக்கு தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 8 பேர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தும் பெற்றோர்கள், தலைமையாசிரியர் வசந்தகுமார் மற்றும் சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் உதயகுமார், சுரேஷ் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மயங்கி விழுந்த 5 மாணவர்களும், 3 மாணவிகளும் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினர்.

மேலும் மற்ற குழந்தைகளை மதிய உணவை உண்ண வேண்டாம் என எச்சரித்து அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் கூறியதாவது:-

இந்த ஊராடசி ஒன்றிய தொடக்க பள்ளியில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் நிரந்தரமாக பணிக்கு அமர்த்தப்படவில்லை. இதன் காரணமாக சமையல் மேற்பார்வையாளரான ஜோஸ்மின் குயினி என்பவர் இப்பகுதியில் உள்ள யாராவது ஒருவரை கொண்டு தரமின்றி உணவு சமைத்து மாணவ- மாணவிகளுக்கு கொடுத்து வருகிறார். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவின் அளவை குறைத்து வழங்கி வருவதாகவும் முட்டைகளை முழுமையாக வேக வைக்காமல் கொடுத்ததாலும் தான் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவை பள்ளி குழந்தைகளுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story