தலைமை ஆசிரியர் அடித்ததால் அரளி விதையை அரைத்து குடித்த பள்ளி மாணவன்


தலைமை ஆசிரியர் அடித்ததால் அரளி விதையை அரைத்து குடித்த பள்ளி மாணவன்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:30 AM IST (Updated: 16 Feb 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவன் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.

உப்பிடமங்கலம்,

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் ஜோதிவடம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட். இவருடைய மகன் பிரகாஷ்(வயது 18). இவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது பிரகாசை தலைமை ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சக மாணவர்கள் முன்பு தன்னை தலைமை ஆசிரியர் அடித்துவிட்டாரே என்று எண்ணிய பிரகாஷ், தலைமை ஆசிரியர் என்னை அடித்துவிட்டார். அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு அரளி விதையை அரைத்து பள்ளியிலேயே குடித்துவிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த பிரகாசை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புலியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பசுதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தாசில்தார் அருள் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவனிடம் நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் மாணவனுக்கு அறிவுரை வழங்கினர். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story