ராஜபாளையத்தில் அமைச்சர் தொடங்கி வைத்த திட்டத்துக்கு மீண்டும் பூமிபூஜை


ராஜபாளையத்தில் அமைச்சர் தொடங்கி வைத்த திட்டத்துக்கு மீண்டும் பூமிபூஜை
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு மீண்டும் 3 மத வழிபாட்டுடன் தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடந்தது.



ராஜபாளையம்

ராஜபாளையம் மக்களின் கனவுத் திட்டமான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ. 198 கோடி மதிப்பீட்டில் கடந்த 10-ந் தேதி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை நடத்தினார். இந்த திட்டத்திற்கு தற்போது டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை அ.தி.மு.க. அறிவிப்போடு நிறுத்திய நிலையில், தான் எடுத்த முயற்சியின் அடிப்படையிலேயே செயல் வடிவம் பெற்றதாக கூறி ராஜபாளையம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.யான தங்கப்பாண்டியன் பணிகள் நடைபெறும் இடத்தில் தமது தலைமையில் பூமி பூஜை செய்வதாக அறிவித்தார

அறிவித்தபடி நேற்று காலை 11 மணி அளவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.யுடன் காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பூஜை நடந்தது. முதலில் இந்து மத வழிபாட்டின் படி தேங்காய் உடைத்து தீபம் காட்டிய பின்னர் ஜெபம் செய்யப்பட்டும் துவா ஓதப்பட்டும் தொடங்கப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லுக்கு மலர் தூவியும், சந்தனம் வைத்தும் வழிபட்டனர். இதை அடுத்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நேரத்தில் அந்த இடத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் வந்தனர். அரசு பணி நடந்து கொண்டிருக்கும் போது சிலர் தடுப்பதாக தொலைபேசி மூலம் புகார் வந்ததாக எம்.எல்.ஏ. யிடம் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரிக்கும் போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. 30 நிமிட நேர வாக்குவாதத்திற்கு பின்னர், தன்னுடைய தொகுதி என்பதால் ஆய்வு செய்ய வந்ததாக கூறி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜபாளையம் நகருக்கு 10 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அனைத்து சமுதாய மக்களையும் பொதுமக்களையும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர்களையும் அழைத்து பூமி பூஜை செய்து ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.

Next Story