சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்


சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 121 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறுபவர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்விற்கு ஏற்ப உணவு செலவினத்தை ஒரு உணவிற்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதேபோல் சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சாலை மறியல் பேராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் சீமைச்சாமி உள்பட ஏராளமானோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அழகேசன் தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 79 பெண்கள் உள்பட 121 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.

Next Story