பகுஜன் சமாஜ் கட்சியை தொடர்ந்து ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது


பகுஜன் சமாஜ் கட்சியை தொடர்ந்து ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:30 AM IST (Updated: 16 Feb 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பகுஜன் சமாஜ் கட்சியை தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பகுஜன் சமாஜ் கட்சியை தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மூன்று பெரிய கட்சிகளான ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தல் களத்தை சந்திக்க உள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அக்கட்சி ஏற்கனவே தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது. அந்த கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பெங்களூருவில் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

7 தொகுதிகள் ஒதுக்கப்படும்


இந்த பேச்சுவார்த்தையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவர் பி.ஜி.ஆர்.சிந்தியா உடன் இருந்தார். அப்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் சேர சரத்பவார் ஒப்புக்கொண்டார். தேசியவாத காங்கிரசுக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியுடன் நாங்கள் ஏற்கனவே கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். இப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினேன். எங்கள் கூட்டணியில் சேர அவர் முடிவு செய்துள்ளார். அவரது கட்சிக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும். எங்கள் கட்சி தலைமையிலான கூட்டணி பலம் அடைந்து வருகிறது.

தீவிர பிரசாரம்

எங்கள் கூட்டணியை ஆதரித்து சரத்பவார் ஒரு வாரம் கர்நாடகத்தில் பிரசாரம் செய்வார். மும்பை-கர்நாடக பகுதியில் சரத்பவார் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story