மேலூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது


மேலூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் நகராட்சியில் தினசரி காய்கறி மார்க்கெட் ரூ.1 கோடியே 15 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

மேலூர்

மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட், கழிப்பறைகள், பேருந்து நுழைவு கட்டணம் உள்பட 11 வளர்ச்சி நிலைகளுக்கான பொது ஏலம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமை தாங்கினார்.

ஏலம் தொடங்குவதற்கு முன்பாக பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், நகராட்சி அலுவலகத்தில் ஏதோ சான்றிதழ் வாங்குவதற்காக வந்தார். அவரை போலீசார் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அவசர நிமித்தமாக சான்றிதழ் தேவைப்படுகிறது, உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்றார். அதற்கு ஏலம் நடப்பதாகவும், அதுவரை யாரும் உள்ளே செல்ல கூடாது என்று போலீசார் கூறி கதவை மூடினர்.

இதைதொடர்ந்து அரசுக்கு வருவாய் தரும் ஏலம் குறித்து வெளியே தெரியாமல் ஏன் இப்படி ரகசியமாக நடத்துகிறீர்கள்? என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் அங்கு கூடவே பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து நகராட்சி அலுவலகத்தினுள் இருந்த பெயர் பலகையில் அவசர அவசரமாக ஏலத்தின் நோட்டீஸ்களை ஒட்டி நகராட்சி ஊழியர் தூக்கி காண்பித்தார். அதன் பின்னர் ஏலம் தொடங்கியது. கடந்தமுறை தினசரி காய்கறி மார்க்கெட் ரூ.46 லட்சத்து 16 ஆயிரத்துக்கு ஏலம் போனதால் இந்த ஆண்டில் ஏலத்தின் ஆரம்ப தொகையாக ரூ.47 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது.

ஏலம் தொடங்கியபோது டி.டி.வி.தினகரன் அணியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் போட்டியுடன் ஏலம் கேட்கப்பட்டது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஏலத்தொகை உயர்த்தி கேட்கப்பட்டது. தினகரன் அணியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் மாறி, மாறி ஏலம் கேட்டு இறுதியாக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் மணிமாறன் என்பவர் 1 கோடியே 15 ஆயிரம் ரூபாய்க்கு தினசரி காய்கறி மார்க்கெட்டை ஏலம் எடுத்தார்.

Next Story