ரெயில் பயணியை கம்பால் தாக்கி செல்போன் பறிப்பு திருடர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ டிரைவர்


ரெயில் பயணியை கம்பால் தாக்கி செல்போன் பறிப்பு திருடர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ டிரைவர்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:45 AM IST (Updated: 16 Feb 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் சினிமாபட பாணியில் ரெயில் பயணியை கம்பால் தாக்கி செல்போன் பறித்த 3 பேரை, ஆட்டோ டிரைவர் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

திருவொற்றியூர்,

டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே சடையங்குப்பம் பாட்டை பகுதியில் சிக்னல் கிடைக்காததால் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓவியர் கோகுல்ராமன் (வயது 24) என்பவர் ரெயில் படிக்கட்டின் அருகே நின்றுகொண்டு செல்போனை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ‘காக்கா முட்டை’ படத்தில் வருவது போன்று, ரெயில் தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்த 3 பேர் கம்பால் கோகுல்ராமனின் கையில் ஓங்கி அடித்தனர். இதில் வலி தாங்காத அவர் செல்போனை கீழே போட்டு விட்டார்.

3 பேர் பிடிபட்டனர்

உடனே 3 பேரும் செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த நேரத்தில் ரெயில் நின்று விட்டதால் கோகுல்ராமன் ரெயிலில் இருந்து குதித்து செல்போன் திருடர்களை துரத்திச்சென்றார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஆசீப்பாஷா (25) என்பவர் திருடர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார். பின்னர் 3 பேரையும் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த முகம்மது யாசீப் (19), பாலா (19) மற்றும் சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

செல்போன் திருடர்களை தைரியமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஆசீப்பாஷாவை இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story