சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 380 பேர் கைது


சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 380 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 4:00 AM IST (Updated: 16 Feb 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் 380 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பநல ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

தேனியில் பள்ளிவாசல் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை அருகில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் செய்தனர். ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலிஜின்னா பேசினார். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 380 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story