ஆரோவில் பொன் விழாவுக்கு பிரதமர் மோடி வருகை


ஆரோவில் பொன் விழாவுக்கு பிரதமர் மோடி வருகை
x
தினத்தந்தி 16 Feb 2018 4:57 AM IST (Updated: 16 Feb 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 24-ந் தேதி வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வானூர்,

புதுச்சேரி மாநில எல்லையையொட்டி தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகிறார்கள். இந்த நகரம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி பொன் விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற 24-ந்தேதி ஆரோவில் சர்வதேச நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இதன்பின் ஆரோவில் தியான மண்டபத்துக்கு சென்று தியான நிகழ்ச்சியில் பங்கேற்பது உள்பட 3 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆரோவில் நகருக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையொட்டி நேற்று காலை உயர் அதிகாரிகள் குழுவினர் ஆரோவில் நகருக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் சூப்பிரண்டு வீச பெருமாள், தாசில்தார் பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் ஆரோவில் நகரில் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆரோவில் நகரிலேயே தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க ஏற்பாடு செய்யலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் ஆரோவில்லில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து சர்வதேச நகர் டிரஸ்ட் செயலாளர் மோகன் வர்கீஸ் சுந்தர், சார்பு செயலாளர் சீனுவாசமூர்த்தி ஆகியோருடனும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

Next Story