மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் மொட்டை அடித்து போராட்டம்


மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் மொட்டை அடித்து போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2018 5:44 AM IST (Updated: 16 Feb 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

புதுவை வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் 4 பேர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கனவை சீரழிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநிலத்தின் ரூ.8ஆயிரம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய தொழிற் சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். மாணவர்கள் வங்கியின் மூலம் பெறப்பட்ட ஒட்டுமொத்த கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்ய வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், 24-ந் தேதி புதுவை வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அஜந்தா சந்திப்பு அருகில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் பூபாலன், சட்ட ஆலோசகர் அழகுமுருகன், பொருளாளர் சூர்யா, செயலாளர்கள் பிரைசூடன் அபி, மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 4 மாணவர்கள் மொட்டை அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story