கைரேகை அற்புதங்கள் : சாமுத்திரிகா சாஸ்திரம்


கைரேகை அற்புதங்கள் : சாமுத்திரிகா சாஸ்திரம்
x
தினத்தந்தி 16 Feb 2018 10:09 AM IST (Updated: 16 Feb 2018 10:09 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார் பரந்தாமன்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார் பரந்தாமன். அவரது திருப்பாதங்களில் அமர்ந் திருந்து சேவை சாதித்துக் கொண்டிருந்தார், லட்சுமிதேவி. இவர்கள் இருவரின் லட்சண்ய லாவண்யத்தை பூத ஞான திருஷ்டிகளால் அனுபவித்துக் கொண்டிருந்த சமுத்திர ராஜன், யோக பலத்தால் தன்னுடைய சீடருக்கு உபதேசித்த நூல் தான் ‘சாமுத்திரிகா சாஸ்திரம்’. இது கார்த்திகேயனால் நிர்மாணிக்கப்பட்ட சாரீக சாஸ்திரமாகும். சாமுத்திரிகா சாஸ்திரம் நூலானது, ஒருவரது முக்காலத்தையும் துல்லியமாக எடுத்துரைக்க உதவும் உன்னதமான நூலாகும். ஒரு மனிதனின் நெற்றியில் எழுதப்பட்ட விதியை, பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும் கூட அழிக்க முடியாது. அதனால் தான் ஒருவருக்கு ஏற்படும் நன்மை, தீமைகளைக் கண்டு, ‘அது அவன் தலையெழுத்து’ என்கிறோம்.

சாமுத்திரிகா சாஸ்திரம் மூன்று பாகங்களைக் கொண்டதாகும். அவை லட்சண விபாகம், குண விபாகம், ரேகா விபாகம். இதில் லட்சண விபாகம் என்பது ஒருவரது முக லட்சணம், உடல்கட்டு முதலியவற்றைக் கொண்டு அவரது எதிர்காலத்தை எடுத்துச் சொல்வதாகும். குண விபாகம் என்பது ஒருவரது நடை, உடை, பாவனைகளைக் கொண்டு அவரது வருங்காலத்தைச் சொல்வதாகும். ரேகா விபாகம் என்பது ஒருவரது தேகத்தில் உள்ள கோடுகள், கைரேகை, சுழிகள், மருக்கள், அடையாளங்கள் போன்றவற்றைக் கொண்டு அவரது எதிர்காலத்தைக் கணிப்பதாகும். இவை நடைமுறையில் சரியாக அமைவது, ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும்.

ஒரு மனித உடலில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 648 ரேகைகள் இருப்ப தாகவும், இவற்றில் 36 ஆயிரத்து 360 ரேகைகள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை என்றும் சாமுத்திரிகா சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரது கைரேகையில் இருந்து அவரது பிறந்த நேரம், லக்னம் மற்றும் கிரக நிலைகளை எடுத்துச் சொல்ல முடியும். பெரிய விபத்து நடக்கும் இடத்தில் அபூர்வமாக சிலர் உயிர் பிழைப்பது உண்டு. அந்த விபத்தில் இந்த ஜாதகர் எப்படி உயிர் பிழைத்தார்? என்ற கேள்வி உண்டாகலாம்.

ஒருவரது கையில் சனி மேட்டில் இருந்து ஒரு ரேகை கீழ் நோக்கி உற்பத்தியாகி, அந்த ரேகை புத்திரேகையை வெட்டிச் சென்றாலோ அல்லது புத்தி ரேகையை முட்டி நின்றாலோ, அதை விபத்து ரேகை என்பார்கள். அதே சமயம் குரு மேட்டில் ஒரு ‘கிராஸ் குறி’ தென்பட்டால், அந்த நபர் எந்த விபத்தில் இருந்தும் தப்பிக்கும் யோகம் கொண்டவர் என்றும் கைரேகை சாஸ்திரம் சொல்கிறது. இது போன்றவர் களுக்கு எந்த விபத்தாலும், உயிருக்கு ஆபத்து ஏற்படாது. கிராஸ் குறியானது, குரு மேட்டில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மேடுகளில் அந்தக் குறி இருக்கக்கூடாது என்பதும், கைரேகை சாஸ்திரம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் முக்கியமான ஒன்று.

–கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story