மோட்டார் சைக்கிள் மோதி கேட்டரிங் மாணவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி கேட்டரிங் மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கேட்டரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர்,

மத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரவின் (வயது 21). இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் கேட்டரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சிவம்பட்டியில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவுக்கு ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவிழா முடிந்த பின்னர் பிரவின் நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பிரவின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரவின் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் படுகாயம் அடைந்து சேலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரவின் இறந்த தகவல் அறிந்த பொதுமக்கள் விபத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்கள் திடீரென மத்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story