தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2018 4:00 AM IST (Updated: 17 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தம்புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் காளிகாதேவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(வயது35). இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டு வாசலில் புத்தம்புதிய புல்லட் மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதேபோல, ராமநாதபுரம் காட்டூருணி தங்கப்பாபுரம் பகுதியை சேர்ந்த சுபுகத்துல்லா(32) தனது புதிய புல்லட் மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த 2 புல்லட்டுகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக 2 பேரும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார்அளித்தனர். இந்த புகார் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜீவரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் புல்லட்டு களை வாலிபர் ஒருவர் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இதனை கண்ட பெரம்பலூரை சேர்ந்த நபர் ஒருவர் அந்த புல்லட்டுகளை பார்ப்பது போல் நடித்து வண்டியின் தயாரிப்பு எண் மற்றும் பார்கோடு ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றை புல்லட் நிறுவனத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது அவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களின் புல்லட்டுகள் என்பதை அறிந்து மேற்கண்ட 2 பேருக்கும் தகவல்தெரிவித்தார். இதனால் புல்லட்டுகளை பறிகொடுத்த 2 பேரும் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் பெரம்பலூருக்கு சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் போலீசார், தகவல் தெரிவித்தவர் மூலமாக புல்லட்டுகளை வாங்குவது போலவும், வாகன சோதனை செய்வது போலவும் சென்று நடித்து புல்லட் திருடனை பிடிக்க தயாராகினர். இதன்படி பெரம்பலூரில் உள்ள ஒதுக்குபுறமான சாலை பகுதிக்கு தகவல் தெரிவித்த நபருடன் புல்லட் திருடனை, வண்டியை காட்ட வருமாறு நைசாக பேசி வரவழைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட திருடன் கரூர் மாவட்டம் குளித்தலை சின்னயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரெத்தினம் என்பவருடைய மகன் சக்திவேல் (37) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பருடன் கடந்த 4-ந் தேதி ராமநாதபுரத்திற்கு சென்று வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த 2 புல்லட்டுகளையும் திருடி ஓட்டி சென்று தலா ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். சக்திவேல் அளித்த தகவலின் பேரில் போலீசார் செங்கம் பகுதிக்கு சென்று ஒர்க்‌ஷாப் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 2 புல்லட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சக்திவேலை, போலீசார் ராமநாதபுரம் அழைத்து வந்து வழக்குபதிந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாலிபர் சக்திவேல் புத்தம் புதிய புல்லட்டுகளை மட்டும் திருடி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது வாகன திருட்டு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் வழக்குகள் உள்ளன.

Next Story