அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி தொடங்கியது: பாபநாசம் மலையில் 250 வகையான மூலிகைகள் உள்ளன


அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி தொடங்கியது: பாபநாசம் மலையில் 250 வகையான மூலிகைகள் உள்ளன
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் மலையில் 250 வகையான மூலிகைகள் உள்ளன என்று நெல்லை அறிவியல் மையத்தில் நடந்த மூலிகை கண்காட்சி புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

நெல்லை,

பாபநாசம் மலையில் 250 வகையான மூலிகைகள் உள்ளன என்று நெல்லை அறிவியல் மையத்தில் நடந்த மூலிகை கண்காட்சி புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

மூலிகை கண்காட்சி


நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி நேற்று தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் அரங்குகள் வைக்கப்பட்டு உள்ளன. சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் தனியாக அரங்கு அமைத்து உள்ளனர். மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. அரியவகை மூலிகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் மைய கல்வி உதவியாளர்கள் மாரிலெனின், பொன்னரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் மைக்கேல் ஜேசுராஜ் வரவேற்று பேசினார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்


தொடர்ந்து மூலிகை கண்காட்சி நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அங்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு வகையான மூலிகைகளை பார்வையிட்டனர்.

அவர்கள் ஒவ்வொரு மூலிகையின் பயன்களையும் பற்றி கேட்டறிந்தனர். இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி நடக்கிறது.

பேட்டி

பின்னர் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவியல் மையத்தில் நடந்த கண்காட்சியில் ஏராளமான அரியவகை மூலிகைகள் இடம் பெற்றுள்ளன. மூலிகைகளை பராமரித்து பாதுகாக்க வேண்டும். இதன் பயன்களை பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கி கூற வேண்டும். இந்த மூலிகைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. அந்த கடமை உணர்வோடு நாம் செயல்பட வேண்டும்.

அகஸ்தியர் மலையில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 250 வகையான அரிய மூலிகைகள் உள்ளன. மலை பகுதியில் 50 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாலை வசதிகள் கிடையாது. குடியிருப்புகளும் இல்லாத அடர்ந்த காட்டு பகுதியாகும். இதுபோன்ற காட்டுபகுதியினால்தான் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

விவசாய நிலங்களை பாதுகாக்க...

மலைப்பகுதிகளுக்கு கீழ்உள்ள விவசாய நிலங்களை யானைகள் அழித்து விடுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மலைப்பகுதியின் கீழ் தேன்கூடு வளர்க்கிறார்கள். இதனால் யானைகள் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வருவது இல்லை. விவசாய பயிர்களும் பாதிக்கப்படுவது இல்லை.

அதேபோல் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளுக்குகீழ் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளை தேன்கூடு வளர்க்கும்படி வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

15 புலிகள்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் முதற்கட்ட புலிகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்து விட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணி நடந்து வருகிறது. வனத்துறை சார்பில் 50 பிட்டுக்கு ஒரு கேமரா வைக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்ட கணக்கெடுப்பில் 15 புலிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. நமது புலிகள் காப்பகத்தில் 20 புலிகள் வரை வசிக்கலாம். இரண்டாம் கட்ட பணி நிறைவடைந்தவுடன் எத்தனை புலிகள் இருக்கும் என்பது தெரியவரும்.

இவ்வாறு புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறினார்.

Next Story