மத்திய, மாநில அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


மத்திய, மாநில அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:30 AM IST (Updated: 17 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன் கூறினார்.

திருப்பூர்,

இந்திய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன் நேற்று காலை திருப்பூர் கே.வி.ஆர்.நகர் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் தேசிய துணைத்தலைவர் முருகன் பேசியதாவது:-

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை கண்காணிப்பதாகும். இதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று(நேற்று) பெறப்பட்ட மனுவில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பொதுக்கழிப்பிடம், தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டுதல் போன்றவை தொடர்பாக மனுக்கள் கொடுத்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதன் ஆரம்ப கல்வி முழுமையாக பெற்றால் அவருடைய வாழ்வாதாரம் சரியான பாதையில் செல்லும். அதற்காக இந்த ஆணையத்தின் மூலம் கல்வி ஒதுக்கீட்டில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எனவே கல்வித்துறை, சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டு சரி செய்து கொடுக்கும்போது, அவர்கள் மன நிறைவோடு செல்கிறார்கள். மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண் டும். பின்னர் அந்த திட்டத்தின் மூலம் தங்கள் தகுதிக்கு ஏற்ப பெற்று பயன்பெற வேண்டும். அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்கி பயன்பெற வேண்டும்.

ஏழை, எளியோர் பயன்பெறும் விதமாக பிரதம மந்திரி ஜங்தன் யோஜ்னா திட்டம், பிரதம மந்திரி பீமா யோஜ்னா திட்டம் போன்ற திட்டங்கள், இலவச கியாஸ் இணைப்பு, பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் மாநில அரசின் நலத்திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்குவதற்காக தாட்கோ வங்கி கடன் உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதே ஆகும். பொதுமக்கள் நன்றாக மத்திய, மாநில அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story