காவிரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு: கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


காவிரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு: கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 17 Feb 2018 3:15 AM IST (Updated: 17 Feb 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

காவிரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்து சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த தீர்ப்பு குறித்து கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

காவிரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்து சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த தீர்ப்பு குறித்து கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்தி அளிப்பதாக உள்ளது


காவிரி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அறிவித்தது. இதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்பட தலைவர்கள், கன்னட சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். இதுபற்றி கர்நாடக பா.ஜனதா தலைவ எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகத்தின் வாதத்தில் பாதியை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது விவசாயிகள் மற்றும் மக்களுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்கிறது. இது நமக்கு சிறிது திருப்தியை அளிப்பதாக உள்ளது. நமது பாசன பகுதியை அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்


தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கர்நாடகம் வாதிட்டது. இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. ஆனால் 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று இருப்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருப்பது குறித்து இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சதானந்த கவுடா, பிரியங்க் கார்கே

மத்திய மந்திரி சதானந்த கவுடா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காவிரி வழக்கின் தீர்ப்பு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. கர்நாடகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் பங்கு அதிகரித்துள்ளது. காவிரி படுகையில் விவசாய பரப்பளவை பெருக்கி கொள்ளவும், பெங்களூரு குடிநீருக்கு 4.75 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது “வாய்மையே வெல்லும்“‘ என குறிப்பிட்டு இருந்தார்.

கர்நாடக சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பிரியங்க் கார்கே தனது டுவிட்டரில், ‘காவிரி வழக்கில் கர்நாடக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. நாங்கள் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தோம். ஆனால், இது போதுமானது‘ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கருத்து தெரிவிக்கவில்லை


ஜனதா தளம்(எஸ்) கட்சி இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிப்பதாக கூறினார். அந்த கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நான் இன்னும் படிக்கவில்லை. அதை படித்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன்“ என்றார்.

Next Story