கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் 2-வது கட்ட சுற்றுப்பயணம் தயார் மகதாயி, லிங்காயத் விவகாரம் பற்றி பேச திட்டம்


கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் 2-வது கட்ட சுற்றுப்பயணம் தயார் மகதாயி, லிங்காயத் விவகாரம் பற்றி பேச திட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:30 AM IST (Updated: 17 Feb 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2-வது கட்ட சுற்றுப்பயண திட்டத்தை மேற்கொள்ள ராகுல்காந்தி தயாராகியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 2-வது கட்ட சுற்றுப்பயண திட்டத்தை மேற்கொள்ள ராகுல்காந்தி தயாராகியுள்ளார். வடகர்நாடக பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் மகதாயி, லிங்காயத் விவகாரத்தை பற்றி பேச திட்டமிட்டுள்ளார்.

ராகுல்காந்தி பயணம்

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும் இன்னும் தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்குள் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பா.ஜனதா சார்பில் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் தொடர்ச்சியாக தேர்தல் நெருங்குவதையொட்டி கர்நாடகத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள். அதேப் போல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் 4 நாள் சுற்றுப்பயணமாக ஐதராபாத்-கர்நாடக பகுதியில் ‘ஜன ஆசீர்வாத் யாத்திரை‘ மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது ராகுல்காந்தி கோவில்கள், தர்காவுக்கு சென்றார். மேலும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் ராகுல்காந்தி பேசுகையில், மத்திய அரசின் வாக்குறுதியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும், ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்களும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக காங்கிரசார் கருதுகிறார்கள்.

2-வது கட்டமாக...

இந்த நிலையில் ராகுல்காந்தி 2-வது கட்டமாக கர்நாடகத்தில் தனது சுற்றுப்பயணத்தை அடுத்த வாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பை-கர்நாடக பகுதிகளை ஒட்டிய கர்நாடக மாவட்டங்களில் அவர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல்காந்தியின் 2-வது சுற்றுப்பயணத்தில் வடகர்நாடகத்தை சேர்ந்த கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், தார்வார், கதக், பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

மகதாயி- லிங்காயத் விவகாரம்

இந்த மாவட்டங்களில் லிங்காயத் சமுதாயத்தினர் அதிகளவில் வசித்து வருகிறார்கள். ஏற்கனவே லிங்காயத்தை தனிமதமாக அங்கீகரிக்க கோரி அந்த சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வீரசைவ மதத்தினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதேப் போல் பா.ஜனதா இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இருப்பினும் லிங்காயத் தனி மத அங்கீகாரம் என்ற கோரிக்கைக்கு பரவலாக எதிர்ப்பும், ஆதரவும் காணப்படுகிறது.

அத்துடன் நீண்ட காலமாக இந்த பகுதிகளில் மகதாயி நதிநீர் பிரச்சினையால் குடிநீர், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வடகர்நாடக பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க கோரி தொடர் போராட்டங்களும் நடந்து வருகிறது. மகதாயி நதிநீர் விவகாரம், லிங்காயத் தனி மத அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்டவற்றில் பா.ஜனதா எதிர்ப்பு தெரிவிப்பதாக கர்நாடக காங்கிரசார் குற்றம்சாட்டி வருகிறார்கள். ராகுல்காந்தி தனது 2-வது கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் லிங்காயத் மற்றும் மகதாயி நதிநீர் விவகாரத்தை கையில் எடுத்து பேசி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுவார் என கூறப்படுகிறது. இந்த விவகாரங்களில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி கூறுவதுடன், பா.ஜனதா இந்த இரு விவகாரங்களிலும் அரசியல் செய்வதை ராகுல்காந்தி புட்டு... புட்டு வைப்பார் என காங்கிரசார் கூறுகிறார்கள்.

Next Story