காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது அய்யாக்கண்ணு பேட்டி


காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2018 3:37 AM IST (Updated: 17 Feb 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் காவிரியில், தமிழகத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

வேலூர்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி தோன்றும் தலைக்காவிரி ஒருகாலத்தில் தமிழகத்திற்கு சொந்தமானதாக இருந்தது. தற்போது கர்நாடகா அரசு ஒப்பந்தத்தை மீறி காவிரியின் குறுக்கே பல அணைகளை கட்டிவிட்டனர். 1978-க்கு பிறகு கர்நாடகாவில் 40 லட்சம் முதல் 50 லட்சம் ஏக்கர் வரை விவசாயம் செய்கிறார்கள். தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது 10 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறோம்.

இன்னும் ஒருவாரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ள விவசாயம் அழிந்துவிடும். விவசாயிகள் பெற்றுள்ள ரூ.25 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வருகிறது. எனவே, ஓட்டுக்காக தமிழர்களை வஞ்சிக்கிறார்கள்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு நல்லதீர்ப்பை வழங்கியிருக்கிறது. காவிரிநீர் இரு மாநிலங்களுக்கும் சொந்தமானதல்ல. பொதுவானது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இனி காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திருடவோ, கொள்ளையடிக்கவோ முடியாது.

15 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக இருந்தாலும் இனி தமிழகத்திற்கு காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கர்நாடகா அரசை, சுப்ரீம் கோர்ட்டு கலைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விவசாய பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அய்யாக்கண்ணும், விவசாயிகளும் வழங்கினர்.க்ஷ

Next Story