கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் - நாராயணசாமி


கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் - நாராயணசாமி
x
தினத்தந்தி 17 Feb 2018 5:00 AM IST (Updated: 17 Feb 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் மக்கள்நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

வில்லியனூரில் விழுப்புரம்-புதுச்சேரி புறவழிச்சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று நடந்தது. போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்டு போக்குவரத்து சிக்னலை இயக்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பல்வேறு நெருக்கடிகளையும், முட்டுக்கட்டைகளையும் அரசு சந்தித்து வருகிறது. இருந்த போதிலும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும், சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும், ரவுடிகளை ஒடுக்குவதிலும் போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் போலீசார் திறம்பட செயல்பட்டு 19 ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதுபோன்ற நடவடிக்கை காரணமாக புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 6 ஆயிரத்து 250 கோடி ரூபாயை வழங்கவில்லை. அதை பல முறை கேட்டும் மத்திய அரசு நிதி வழங்காமல் உள்ளது. இந்த சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு 550 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை தரவில்லை.

புதுவை மாநிலத்தில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட 40 ஆயிரம் மிக்சி, கிரைண்டர்கள் இன்னமும் மக்களுக்கு வழங்கப்படாமல் குடோனில் உள்ளன. இந்த மிக்சி, கிரைண்டர்கள் வாங்கியதில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது.

புதுவையில் கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு துறையிலும் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்து, அரசுக்கு பெரும் செலவையும், அரசு சார்பு நிறுவனங்களில் நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டனர்.

கடந்த ஆட்சியின் இத்தகைய செயலால், தற்போது எங்களுடைய ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை தயாரித்து ஒப்புதலுக்காக கோப்புகளை அனுப்பினால், அதனை நிறைவேற்ற முடியாதபடி திருப்பி அனுப்புகிறார்கள். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

காவல் துறைக்கு எங்கள் ஆட்சியில் முழு சுதந்திரம் அளித்து, சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு பாராட்டுகள் வழங்கப்படுகிறது. அதே சமயம் சட்டத்தை மீறும் போலீசார் மீதும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Next Story