புதுவை நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு, குப்பை வரி நிறுத்தி வைப்பு


புதுவை நகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு, குப்பை வரி நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2018 4:45 AM IST (Updated: 17 Feb 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கடைகளுக்கான வாடகை உயர்வு, குப்பை வரி மற்றும் இதர வரி உயர்வுகளை நிறுத்தி வைப்பது என்று அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்திலுள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கடைகளுக்கு சமீபத்தில் வரி உயர்த்தப்பட்டது. மேலும் குப்பை வாருவதற்கு வரி விதிக்கப்பட்டது. இதர வரிகளும் கடுமையாக உயர்த்தப்பட்டன.

இந்த வரி உயர்வுகளுக்கு வர்த்தகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வர்த்தக சபை, தொழில் வர்த்தக சங்கங்களின் பேரவை போன்றவை எந்த முடிவும் அறிவிக்காமல் இருந்தன.

இந்தநிலையில் இந்த வரிகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது. சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமது மன்சூர், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், வருவாய் அதிகாரி பாலாஜி, வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், தொழில் வர்த்தக சங்கங்களின் பேரவை தலைவர் கருணாநிதி, சதாசிவம், பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி சங்க தலைவர் எம்.கே.ராமன், சிவகுருநாதன், நெல்லுமண்டி கடை வியாபாரி சங்க தலைவர் சுமர்சிங், நெல்லுமண்டி நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் தங்கம், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர், குபேர் பஜார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 60 வியாபார சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் குப்பை வாருவதற்கான வரி மற்றும் இதர வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எனவும், கடைகளுக்கு பழைய வாடகையே வசூலிப்பது என்றும் உயர்த்தப்பட்ட புதிய வாடகை மற்றும் வரிகள் சம்பந்தமாக முதல்-அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு குழு அமைத்து அதன் அடிப்படையில் வாடகை மற்றும் வரிகளை நிர்ணயிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி கடை அடைப்பு நடத்துவது என்று சில வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர். அந்த சங்க பிரதிநிதிகள் என்னை சந்தித்தபோது மக்கள் நலன் கருதி கடை அடைப்பு போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என அழைப்புவிடுத்தேன்.

அதற்கு செவிசாய்க்காத அந்த வியாபார சங்கங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் கடை அடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது மக்கள் நலனை கருத்தில்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் சுயநலத்துக்காக நடைபெறும் இந்த கடை அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகளும், வியாபார சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டாம் என்று புதுவை அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story