தீர்வு தரும் தீர்ப்பா ?


தீர்வு தரும் தீர்ப்பா ?
x
தினத்தந்தி 17 Feb 2018 11:00 AM IST (Updated: 17 Feb 2018 10:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் பிரச்சினை கடந்த 125 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. 1892-ல் மெட்ராஸ், மைசூர் சமஸ்தானங்களுக்கிடையே போடப்பட்ட முதல் ஒப்பந்தமே தோல்வியில் முடிந்தது.

1924-ம் ஆண்டு 50 ஆண்டுகளுக்கான இரண்டாவது ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்தன.

இரு மாநிலங்களுக்குமிடையே நடுவர் மன்றம் அமைப்பது ஒன்று தான் தீர்வாகும் என்று முடிவெடுத்து அன்றைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்கு பிறகு 1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றம் அமைக்க குரல் வாக்கெடுப்பு நடத்தியது.

பெரும்பான்மை அடிப்படையில் நடுவர் மன்றம் சித்த கோஷ் முகர்ஜி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.

அவ்வமைப்பு கர்நாடக, தமிழக மாநிலங்களில் முழுமையாக சுற்றுப்பயணம் செய்து இரு மாநில தண்ணீர் தேவை, கிடைக்கும் அளவுகளை கணக்கிட்டு இடைக்கால தீர்ப்பாக 1991-ம் வருடத்தில் ஆண்டொன்றுக்கு தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி மாதாந்திர அடிப்படையில் 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்க மறுத்து தமிழகம் கூடுதலாக 72 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டுமெனவும், கர்நாடகமோ தீர்ப்பில் கூறிய 192 டி.எம்.சி.யை 132 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுக்களை ஏற்க முடியாது என்றும் நடுவர் மன்றத்திடம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளவும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதே வேளையில் இறுதி தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட மாநிலங்களும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என உத்தரவிட்டது.

தொடர்ந்து நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது நடுவர் மன்ற தலைவரோ நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றீர்கள். எனவே அங்கேயே தீர்த்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி மனுவை ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி உரிய தண்ணீர் பெற்று தரவும், தொடர்ந்து இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரு மாநில முதல்-அமைச்சர்கள் பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதனை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், அன்றைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷட்டரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதற்கிடையே, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அரசிதழில் வெளியிட்டார்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டுக்குழு அமைக்க மத்திய அரசு காலம் கடத்தியது. உடனே அமைக்க வலியுறுத்தி ஜெயலலிதா அவசர வழக்கு தொடர்ந்தார். கர்நாடகமோ கொள்கை பூர்வமாக அவற்றை அமைக்க ஒப்புக் கொள்வதாகவும், தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் புதிய அரசு பொறுப்பேற்று அமைப்பது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தற்காலிகமாக கண்காணிப்புக் குழுவை அமைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை மத்திய அரசு முதலில் ஏற்றுக் கொண்டது. பிறகு மறுத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளதாக சட்டத்திற்கு புறம்பாக கூறியது. இதனால் இந்திய வரலாற்றில் இல்லாத அரசியல் சட்ட நெருக்கடி ஏற்பட்டது. பிறகு நிலுவையிலிருந்த அனைத்து வழக்குகளையும் 3 மாத காலம் தொடர் விசாரணை நடத்தி நேற்று இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் நதிகளை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்துக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். காரணம், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் அண்டை மாநிலங்களோடு அடிமைப்பட்டு இருந்த தமிழகத்துக்கு இந்த தீர்ப்பு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதனை பயன்படுத்தி மத்திய அரசு நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்து இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தேவைக்கேற்ப தண்ணீரின் அளவை கூடுதலாக கேட்டுப்பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். தேவையானால் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆலோசனை பெறலாம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறி இருப்பது இதுதான் முதல் தடவையாக இருக்கும். ஆகவே, பிரதமர் மோடி, அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இந்தியாவின் ஒற்றுமையையும், அண்டை மாநில உறவை பாதுகாத்திடவும் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

தண்ணீர் தேவை இருப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமையை உருவாக்கி தேவையான தண்ணீரை பகிந்தளிப்பதற்கு மேலாண்மை வாரியத்துக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, மேல் முறையீடு என்ற பெயரில் கிடைத்த தீர்ப்பை முடக்கிவிடக் கூடாது.

விவசாயிகள் அரசியல் கட்சிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக விவசாயிகளையும், கர்நாடகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநில விவசாயி களையும் பாதுகாக்க முடியும்.

பி.ஆர்.பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு

Next Story