ராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி


ராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி
x
தினத்தந்தி 17 Feb 2018 11:15 AM IST (Updated: 17 Feb 2018 10:55 AM IST)
t-max-icont-min-icon

நாளை (பிப்ரவரி 18) ஸ்ரீ ராம கிருஷ்ணபரமஹம்சரின் பிறந்தநாள்.

உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். அப்படிப்பட்ட விவேகானந்தரை உருவாக்கியவர் சுவாமி ராம கிருஷ்ண பரமஹம்சர். இவர் மேற்கு வங்காளத்தில் காமார் புக்கூர் என்ற குக்கிராமத்தில் 1836-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அவதரித்தார். அந்த காலத்தில் பண்டிதர்கள் மட்டுமே சாஸ்திரங்கள் கற்றுக் கொடுத்து வந்தனர். அந்த சாஸ்திரங்களின் சாராம்சத்தை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சர் கதைகள் மூலம் சொல்லி புரிய வைத்தார்.

சான்றாக அவர் கூறிய கதை ஒன்றை பார்ப்போம்.

கங்கை நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு படகு. படகில் ஓடக்காரனும் சில பயணிகளும். பயணிகளுள் ஓர் அரைகுறை பண்டிதர். தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் கற்று விட்டோம் என்ற கர்வம் அவரை அதிகம் அலட்டிக்க வைத்தது. அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார்.

‘ஏய் ஓடக்காரா, இப்படி நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா? என்று ஏளனமாக கேட்டார்’. ‘ஐயா, சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?’ என்றான் ஓடக்காரன்.

‘உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாக போச்சு’ என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார். ‘சரி திருக்குறளாவது படித்திருக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு ஓடக்காரன் ‘அதை நான் தொட்டது கூடகிடையாதே, சாமி’ என்றான். ‘தண்டமே இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே, போகட்டும் பாகவதமாவது வாசித்திருக்கிறாயா’? என்றார். சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான். ‘அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில் முக்கால்வாசி நஷ்டமாகி விட்டது. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குதான் வெளிச்சம்’ என்று பண்டிதர் சொல்லி முடித்தார்.

அப்போது கரை புரளும் வெள்ளம். அலையடித்து படகு கவிழ்ந்து விடும் என்ற நிலையில் நீந்தத் தெரிந்தவர்கள் நதியில் குதித்து நீந்திக் கரையேறினர். ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். ‘குதிங்க சாமி. இல்லேன்னா மூழ்கிடுவீங்க.’ என்று ஓடக்காரன் சொல்ல, ‘ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதே...’ என்று பண்டிதர் சொன்னார்.

அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், ‘சாமி, எனக்கு கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவும் தெரியாது. ஆனால் நீச்சல் தெரியும். இதெல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப்போறீங்களே’ என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்தார்.

இந்தக் கதை பகவான் ராமகிருஷ்ணர் கூறியது. இன்று மனிதர்களுள் பலரும் இப்படித்தானே செய்திகளை சுமக்கும் பொதி மாடுகளாக உள்ளனர். உலகைப்பற்றிய, இயற்கைப்பற்றிய, பிறரைப்பற்றிய செய்திகள் ஏராளம் அவர்களுக்குத் தெரியும். அனால் மனிதனுக்கு தன்னைப்பற்றிய அறிவும், ஞானமும் அதிகமில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நான் யார்? நான் பிறந்ததற்கு நோக்கம் எதாவது உண்டா? எல்லோரையும் போலவே நானும் பிறந்து, இறந்து போய் விட வேண்டியது தானா? அல்லது எனது வாழ்க்கைக்கு ஒரு பயனுண்டா? என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. தன்னைப் பற்றிய தகவல்கள் தான் மனிதனிடம் இன்று இருக்கிறது. அந்தத் தகவல்களே அவனை திருப்தியடையச் செய்திடுமா? பஞ்சாங்கத்தில் இந்த நேரம் மழை பெய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழை பற்றிய செய்தியை சொல்லியதால், பஞ்சாங்கத்தை பிழிந்தால் மழைநீர் வந்து விடுமா? என்று ராம கிருஷ்ணர் கேட்பார். சமய, சாஸ்திர நூல்களைப்பற்றியும் அந்த கேள்வியை கேட்பார்.

சிலருக்கு பால் எங்கிருந்து வருகிறது என்று தெரியும். சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். சிலர் பாலை தொட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரே பாலை பருக முடிகிறது. அது போல சாஸ்திரங்களைச்சிலர் படித்திருக்கிறார்கள். சிலர் மேற்கோள் காட்டுகிறார்கள். ஒரு சிலரே சாஸ்திரம் கூறும் ஞானத்தையும், தெய்வசக்தியையும் உணர்கிறார்கள். பிறருக்கும் உணர்த்துகிறார்கள்.

ராம கிருஷ்ணர் பக்தர்களுக்கும், துறவிகளுக்கும் கூறும் போது முதலில் கடவுள். பிறகு உலகம். இந்த வகையில் தான் மனிதனின் கற்றலும், கவனமும் இருக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே அவர் வாழ்ந்தும் காட்டினார். லோக மாதாவைத் தரிசிப்பதிலும், தெய்வ ஞானத்தை பெறுவதற்கும் தமது ஆரம்ப கால வாழ்க்கையின் 12 ஆண்டுகளை செலவிட்டார். இறைவனிடத்தில் தன்னை முற்றிலுமாக கரைத்துக் கொண்டதால் ஊரார் ராமகிருஷ்ணரை பைத்தியம் என்றும், பித்தர் என்றும் ஏளனம் செய்தனர். அப்போது அவர் சுவாமி விவேகானந்தர் போன்ற தமது சீடர்களிடம் புன்னகையுடன் ‘உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். சிலர் பணத்தின் மீது, சிலர் உடல் இன்பத்தின் மீது, வேறு சிலர் பெயர், புகழ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.

நான் இறைவன் மீது பைத்தியமாக இருக்கிறேன். இந்த எல்லா பைத்தியங்களுள் எது சிறந்த பைத்தியம்... சொல்லுங்கள்? என்று கேட்டு அவர்களை சிந்திக்க வைப்பார். சிரிக்க வைப்பார். இறைவனை பற்றிய ஞானம் அதிமுக்கியமானது. எதைப் பெற்றால் எல்லாம் பெற்றதற்குச் சமமோ அந்த அறிவைப் பெறுவதில் தான் ராம கிருஷ்ணரின் ஆர்வம் இருந்தது.

எந்த அறிவையும் பெறாமல் வாழ்வில் சொத்து, சுகம் என்று ஏனைய அனைத்தும் பெற்றிருந்தும் மனிதன் நிறைவான நிலையையும், நிம்மதியையும் அடைய முடியாதோ, அதில் ராமகிருஷ்ணர் கூடுதல் கவனம் காட்டச் சொல்கிறார்.

ராமகிருஷ்ணர் நமக்குக் காட்டுவது இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இதில் தர்மத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்து நீயும் முன்னேறி, பிறருக்கும் சேவை செய்து வந்தால் ஆனந்தமாக இருப்பது நீ மட்டுமல்ல, ஆண்டவனும் தான் என்பது தான்.

ஆண்டவனின் ஆனந்தத்தையே பெருக்கும் வாழ்க்கையை வாழக்கற்றுக் கொடுப்பது தான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கை நெறி.

சுவாமி விமுர்த்தானந்தர், மேலாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், சென்னை

Next Story