ராஜராஜன் கண்ட ‘தஞ்சை சிறிய கோவில்’


ராஜராஜன் கண்ட ‘தஞ்சை சிறிய கோவில்’
x
தினத்தந்தி 17 Feb 2018 11:45 AM IST (Updated: 17 Feb 2018 11:50 AM IST)
t-max-icont-min-icon

ராஜராஜ சோழன் தான் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை முழுமையாக பார்க்க ஆசைப்பட்டிருந்தால், அது எப்படி இருக்கும் என்பதை கதாசிரியர் ஷ்யாம் புனைவு கதையாக எழுதியிருக்கிறார். இத்தகைய புனைவு கதைகளின் மூலம் தமிழ் வரலாற்றையும், தமிழர்களின் பெருமைகளையும் உலகறிய செய்வதே இதன் நோக்கம்.

“அடேய்..! என்னை ஏனடா கட்டி இழுத்துக்கொண்டு வரு கிறீர்கள்?. எனக்கு உயரம் என்றால் பயம் இல்லையடா. நானே ஆறு அடி உயரம். ஆனால் எப்பேர்ப்பட்ட தைரியசாலிக்கும் 216 அடி என்றால், உள்ளே சற்று அதிகமாகவே நடுக்கம் இருக்கத்தானடா செய்யும். நீங்கள் அந்த 216 அடியையும் மிஞ்சி....” என்று வந்தியத் தேவர் புலம்பிக் கொண்டிருக்கையில், முன்னால் சென்று கொண்டிருந்த குதிரையில் இருந்து கம்பீர குரல் ஒன்று வந்தது.

“மதுரா, அக்கை.. இவரை உச்சி வரை இழுத்து வர வேண்டியது உங்கள் இருவரின் பொறுப்பு. இது என் ஆணை” ராஜராஜ சோழன் கொஞ்சம் செல்லமாகவே கர்ஜித்தார். அந்த கர்ஜனை, வேட்டையாடும் சிங்கத்திற்கானதல்ல.. குட்டிகளோடும், உறவுகளோடும் விளையாடும் பாசத்திற்கானது.

“தளபதியாரே! என்னுடன் அமைதியாக வந்து விட்டால் உங்களுக்கு நல்லது” ராஜேந்திர சோழர், தனது மாமனான வல்லவரையரின் இடக்கையைப் பிடித்து, தன் வாள் உருவி, குரல் கொடுத்தார்.

வல்லவரையரின் வலக்கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த குந்தவை தேவியார், ராஜேந்திர சோழனின் கூற்றை ஆமோதித்தார். அவர்களோடு சிறிய படை ஒன்றும், 320 அடி உயரம் கொண்ட, கல்லாலும், மண்ணாலும், களிமண்ணாலும் அமைக்கப்பட்ட, ஒரு மிகப் பெரிய மேட்டின் மீது ஏறிக்கொண்டிருந்தார்கள். அந்த பெரிய முகட்டை, ஒரு வித கலவையால், சோழர்கள் எழுப்பிய மலை என்றே கூறலாம்.

தஞ்சையில் அமைந்த பெரிய கோவிலான, ராஜராஜேஸ்வரம் ஆலயத்தின் கும்பாபிஷேகம் முடிந்தாகிவிட்டது. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம், ராஜராஜ சோழர் எழுப்பிய ஈசனின் கற்றளிக்கு வந்து, வியந்த வண்ணம் இருந்தார்கள். தஞ்சை கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து இரண்டு காத தூரத்தில், ஈசனே வியக்கும் விதத்தில், தஞ்சை கோவிலின் விமானத்தை விட 100 அடி அதிக உயரமான அந்த மேடு, குஞ்சரமல்லரின் திட்டத்தாலும், நித்த வினோத பெருந்தச்சன் மற்றும் குலத்திசடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகியோரின் செயல் திறனாலும் சோழர்களுடன் சேர்ந்து மற்ற தேசத்துப் போர்வீரர்களின் உதவியாலும், கோவிலின் மறுபுறத்தில் அந்த மலை போன்ற மேடு அமைக்கப்பட்டது.

இப்பொழுதுதான் பல ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கானவர்களையும், பல நூறு யானை களையும் கொண்டு தஞ்சை பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்த பெரிய மேட்டுப் பகுதி எதற்காக? ஏன்? என்று எவராலும் கேட்க முடியவில்லை. ஏனென்றால் அதை அமைக்கக் கூறியது மாமன்னன் ராஜராஜ சோழன்.

முக்கோண வடிவம் கொண்ட மேடு, இரண்டு மூன்று மாட்டுவண்டிகள் சுற்றி சுற்றி மேலே செல்லும் அளவிற்கு அகலம் தரப்பட்டிருந்தது. அடித் தளம், தஞ்சை விமான கோபுர அடித்தளத்தை விட இரு மடங்காக அமைக்கப்பட்டிருந்தது. இருபுறங்களிலும் விபத்துகளைத் தவிர்க்க, சவுக்கு மற்றும் மூங்கில் கட்டைகள் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த மலை போன்ற மேட்டின் கலவையும், அதன் உறுதியின் நுணுக்கமும் அதை உருவாக்கிய அற்புதக் கலைஞானம் கொண்ட அந்த கல்தச்சர்களே அறிவர். உச்சியில் ஒரு சிறிய கூடாரம் போன்று அமைக்கப்பட்டு, திரை போடப்பட்டிருந்தது.

வல்லவரையரின் பயத்திற்கு இந்த 320 அடி உயரமே காரணம். அந்த சிறிய படை, மலை மேட்டின் உச்சியை அடைந்தது. வல்லவரையரால் தன் நாவை அடக்க முடியவில்லை.

தனக்குள் எழும் சந்தேகத்தை நிவர்த்திக்கும் விதமாக, மலை மேட்டின் கூட்டத்தில் நின்றிருந்த, ராஜராஜரின் முன்பாக வந்து நின்றார்.

“அரசே! என்ன விபரீதம் இது. நாம் எத்தனை உயரத்தில் நிற்கிறோம் என்று அறிவீரா?. எதற்காக இதெல்லாம்” என்றார்.

அவரை புன்முறுவலோடு பார்த்த ராஜராஜ சோழன், வல்லவரையரின் தோள் மீது கை போட்டு, மூடப்பட்டிருந்த திரைக்கு அருகில் தன் நண்பரை கொண்டு நிறுத்தினார்; திரை விலக்கினார். வல்லவரையருடன் இருந்த ராஜேந்திர சோழன், குந்தவை பிராட்டியார், அருண்மொழி பிரம்மராயன், கல் தச்சர்கள் மற்றும் தளபதிகளுடன் கூடிய சிறிய காலாட்படை வீரர்கள் அனைவரும் அங்கு கண்ட காட்சியால் பிரம்மிப்படைந்தனர். தஞ்சை கோவிலை, இவ்வாறு அவர்கள் காண்பார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். முன்பாக தன்னுடன் அழைத்துச் சென்ற ஓவியர்களை, அங்கு கண்ட காட்சியை ஓவியமாகத் தீட்டச் சென்னார் ராஜராஜ சோழன்.

பின் தன்னுடன் வந்தவர்களின் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடைகூறும் விதமாக பேசத் தொடங்கினான்.

“எம் ஈசனுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும். அவரை என்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். நாம் அமைக்கும் ஆலயம் மிகப் பெரியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இதோ.. இந்த ராஜராஜேஸ்வரம் எழுப்பினேன். ஆனால் “நான் கட்டியது, மிகப் பெரிய கோவில். அதை முழுதாய், எவராலும் ஒற்றைப் பார்வையில், தங்கள் கண்களுக்குள் அடக்க முடியாதபடி பெரிதாய் கட்டி விட்டேன்” என்ற பெருமை என்னைத் தொற்றிக்கொண்டது. ஒரு வித கர்வமும் என்னை ஆட்கொண்டது.

ஆனால், மனதின் ஓரத்தில், ‘நீ பார்க்கும் விதம் வேறு.. ஈசன் பார்க்கும் விதம் வேறு..’ என்று ஏதோ உணர்த்தியது. இக்கற்றளியை, வேறு ஒரு கோணத்தில், இன்னும் இதை விட உயரத்தில் இருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணி, இந்த மலையை உருவாக்கினேன். இத்தனை அடி உயரத்தில் இருந்து பார்த்தால் தான் புரிகிறது.. நான் கட்டியது எத்தனை சிறிய கோவில் என்று. நமக்கும் மேலே அமர்ந்து நம்மை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும், அந்த ஈசனின் முன் இந்த ஆலயம் எவ்வளவு சிறியதாய் தென்படும். இப்போது என் கர்வம் தவிடு பொடியாகி விட்டது.

“எம் ஈசனே.. எத்தனைச் சிறிதாய் சிந்தித்து விட்டேன். நீ பரம்பொருள்.. எங்கும் நிறைந்திருப்பவன். உனக்காக நான் கட்டியது பெரிய கோவிலா? இல்லை.. இது சிறிய கோவிலே. அகிலமெல்லாம் நிறைந்து இருக்கும் உன்னை, இந்த சோழ தேசத்தினுள்ளும் குடி அமர, இந்த சிவபாதசேகரன் எழுப்பிய ஒரு சிறிய கோவில். என் சோழ மக்களின் மனதிலெல்லாம் புகுந்து, சோழ தேசத்தினுள் நிறைந்து நிற்க, எம் ஈசனே, இந்த சிவபாத சேகரன் வேண்டுகிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!”

மன்னன் ராஜராஜ சோழனின் வார்த்தைகளைக் கேட்டு, அங்கு குழுமி இருந்த அனைவரும், ராஜராஜருடன் சேர்ந்து ஈசனை வணங்க, ராஜராஜேஸ்வரத்தின் ஆலய மணி ஒலிக்க, தஞ்சையில் குடிகொண்டார்.. ஆடவல்லானான ராஜராஜேஸ்வரமுடையார்.

-ஷ்யாம்.

Next Story