ஆதிகால இங்கிலாந்துக்காரர்கள் கருப்பு நிறத்தினர்?


ஆதிகால இங்கிலாந்துக்காரர்கள் கருப்பு நிறத்தினர்?
x
தினத்தந்தி 17 Feb 2018 1:30 PM IST (Updated: 17 Feb 2018 1:15 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து, வெள்ளையர் தேசம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஆதிகால இங்கிலாந்துக் காரர்கள் கருப்பு நிறத்தினர் என்கிறது ஒரு புதிய ஆய்வு. அவர்களின் தோலின் நிறம் கருப்பு என்பதுடன், விழிகள் நீல நிறத்தில் இருந்தன என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘செட்டார்’ என இன மனிதரின் எலும்புக்கூடு ஒன்று 1903-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்டதிலேயே பழமையான எலும்புக்கூடாகும் இது. லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அதை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியது.

பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் அதை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் முக வடிவத்தை மீட்டெடுத்தனர்.

அதன் அடிப்படையில், ஐரோப்பியர்களின் தற் போதைய வெள்ளை நிறத் தோற்றம், ஒப்பீட்டு அளவில் ‘சமீபத்தியதுதான்’ என்கிறது இந்த ஆய்வு.

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இங்கிலாந்து மக்களின் மரபணுவை இதற்குமுன் இதுபோல பகுப்பாய்வு செய்ததில்லை.

பனியுகத்துக்குப் பின் இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்த மக்கள் குறித்த தெளிவான விளக்கத்தை இந்த ஆய்வு வழங்குவதாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்தின் செட்டார் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ‘கவ்’ குகையில் 115 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட செட்டார் மனிதனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அதை சோதனைக்கு உட்படுத்தியதில், தற்போதைய இங்கிலாந்துவாசிகளைவிட அந்த மனிதர் உயரம் குறைவாக இருந்திருக்கிறார் என்றும், அவருடைய உயரம் 5 அடி 5 அங்குலம்தான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர், தனது 20 வயதில் இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மனிதகுல தோற்றத்தை ஆய்வுசெய்யும், அருங்காட்சியகத்தின் ஆய்வுத் தலைவர் பேராசிரியர் கிறிஸ் ஸ்டிரிங்கர், அந்த செட்டார் மனிதரின் எலும்புக்கூட்டை கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறார்.

இப்போது இந்த ஆய்வு முடிவு சொல்லும் விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம் என்றும் அவர் சொல்கிறார்.

அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில், அதில் ஏகப்பட்ட முறிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அந்த மனிதர் மிக மோசமான வன்முறைத் தாக்குதலால் இறந்திருக்கலாம். அவர் எப்படி அந்தக் குகைக்குள் வந்தார் எனத் தெரியவில்லை, சக பழங்குடிகள் அவரது உடலை அங்கு போட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கற்கால இங்கிலாந்து மக்கள் கருமையான, வழக்கத்தைவிட அதிகம் சுருண்ட முடிகளைக் கொண்டிருந்துள்ளனர். அவர்களின் விழி நீல நிறத்திலும், அவர்களின் தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்திலும் இருந்திருக்கிறது.

இது இப்போது நமக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் இதுதான் வடக்கு ஐரோப்பியர்களின் தோற்றமாக இருந்திருக்கிறது.

புதைபடிவங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற நெதர்லாந்து கலைஞர்களான அல்போன்சும், கென்னிசும் இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு, அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை அளவெடுத்து, அதற்கு ஒரு முக வடிவம் கொடுத்தனர். அதன் வடிவம் ஆச்சரியப்படத்தக்கவகையில் இருந்தது.

தற்போதைய வெள்ளை நிறம், மத்திய கிழக்கில் இருந்து இங்கிலாந்துக்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த மக்களால் வந்திருக்கலாம்.

அந்த மக்கள் எப்படி வெள்ளை நிறமாக பரிணாமம் அடைந்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. வைட்டமின் டி குறைபாட்டினால் அவர்கள் வெள்ளை நிறத்துக்கு மாறியிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

தங்களின் வெள்ளை நிறந்தை உயர்ந்ததாக வெள்ளையர்கள் கருதுகிறார்கள், ஆனால் அவர்களும் ஆதியில் ‘கருப்பர்கள்தான்’ என்ற உண்மை தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

Next Story