கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்


கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 18 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

நாமக்கல்,

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்த வலியுறுத்தியும் கடந்த 12-ந் தேதி முதல் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கொண்டு செல்லும் பணியும் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மாநில அளவிலான டெண்டர் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதில் எண்ணெய் நிறுவனங்கள் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டது. எனவே பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் ஒருசில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவித்தனர்.

அது தொடர்பாக விவாதிக்க நாமக்கல்லில் கடந்த 15-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சொந்தமாக லாரி இல்லாதவர்கள் ரூ.1 லட்சம் காப்புத்தொகை செலுத்தி, 120 நாட்களில் லாரி வாங்கி விடுவதாக உறுதியளிக்கும் டெண்டர் ஒதுக்கீட்டு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், 18 மற்றும் 21 டன் கொள்ளளவு கொண்ட இரு வகையான டேங்கர் லாரிகளுக்கும் டெண்டரில் ஒரே முன்னுரிமை வழங்கவேண்டும். ஒரே வாடகை அளிக்க வேண்டும். அந்த கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து வேலைநிறுத்தம் தொடருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் நிபந்தனையில் சில திருத்தங்களை செய்து நேற்று முன்தினம் இரவு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் டேங்கர் லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இருந்தன.

எனவே அது தொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் டெண்டர் கமிட்டி கூட்டம் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம், வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ள டெண்டர் நிபந்தனையில் 21 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளுக்கு 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் 18 டன் மற்றும் 21 டன் கொள்ளளவு கொண்ட இரு லாரிகளுக்கும் சரிசமமாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இந்த நிலையில் 21 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 18 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதேபோல் சொந்தமாக லாரி இல்லாதவர்கள் ரூ.1 லட்சம் காப்புத்தொகை செலுத்தி, 120 நாட்களில் லாரி வாங்கி விடுவதாக உறுதியளிக்கும் டெண்டர் ஒதுக்கீட்டு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் தற்போது புதிய அறிவிப்பில் லாரி இல்லாத நபர்கள் 10 சதவீத பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல மேலும் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இருப்பதால், எங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டோம்.

வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நேற்று மாலை முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் ஓட தொடங்கின.




Next Story