ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி


ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2018 4:15 AM IST (Updated: 17 Feb 2018 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

திண்டுக்கல் மாவட்டம் கோட்டைபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 31), லாரி டிரைவர். இவர் லாரியில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஆரல்வாய்மொழி அருகே தோவாளை ஆற்றுப்பாலம் திருப்பத்தில் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு சென்ற டாரஸ் லாரி வந்தது. அந்த லாரியை திருச்சியை சேர்ந்த விஜய் (22) என்பவர் ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில், ஜெயபிரகாஷ் ஓட்டி வந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் ஜெயபிரகாஷ், அவருடன் இருந்த வேலவேந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வேலவேந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் மற்றொரு லாரியின் டிரைவர் விஜய் காயமின்றி உயிர்தப்பினார்.

 இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த ஜெயபிரகாசுக்கு, பரிமளா என்ற மனைவியும், 2½ வயதுடைய ஆண் குழந்தையும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.


Next Story